இங்கிலாந்தில் இலவசமாக டோர் டெலிவரி செய்யும் ரோபோக்கள்

இங்கிலாந்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கியுள்ள மக்களுக்கு, மளிகை பொருட்களை ஷாப்பிங் ரோபோக்கள் டோர் டெலிவரி செய்து வருகின்றன.

இங்கிலாந்தின் மில்டன் கெய்ன்ஸ் நகரில் முழங்கால் அளவு உயரம், வெள்ளை நிற பிளாஸ்டிக் பெட்டி போன்று இருக்கும் ரோபோக்கள், ஆறு சக்கரங்கள் உதவியுடன் வலம்வருவதை சாதாரணமாக காண முடியும். கடந்த 2 வருடங்களாக இதே போன்று ரோபோக்கள் மளிகை பொருட்களை டெலிவரி செய்து வருகின்றன. ஆனால் இங்கிலாந்து அரசு மார்ச் 23 முதல் சமூக இடைவெளியை கடுமையாக பின்பற்ற உத்தரவிட்டதில் இருந்து, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பிஸியாக செயல்பட துவங்கிய ரோபோ, சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக பொருட்களை டெலிவரி செய்து வருகிறது. பொதுமக்களிடையே ரோபோ சேவைக்கான தேவையும் வெகுவாக அதிகரித்துள்ளது.

‛தற்போது நாங்கள் அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் இலவசமாக டெலிவரி செய்து வருகிறோம். இந்த மன அழுத்தம் நிறைந்த காலத்தில் சுகாதார பணியாளர்களின் வாழ்க்கையில் மிக சிறிய அளவு உதவ விரும்பினோம். நிறைய பேர் வாரத்திற்கு 80 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றி வருகின்றனர். எனவே அவர்களுக்கு உள்ளூர் மளிகை கடைகளுக்கு செல்ல நேரம் இருப்பதில்லை. எனவே அவர்கள் எங்கள் ரோபோவை ஷாப்பிங்கிற்கு பயன்படுத்தி கொள்கின்றனர். இதற்கான தீர்வில் எங்களுடைய பங்கும் இருப்பதால் பெருமையளிக்கிறது’ என ரோபோவை உருவாக்கிய ஸ்டார்ஷிப் நிறுவனத்தை சேர்ந்த ஹென்றி ஹாரிஸ்-பர்லாண்ட் தெரிவித்துள்ளார்.

மற்றவர்கள் அடையாளம் காண வசதியாக ரோபோவில் ஒரு ஆண்டெனாவும் அதன் நுனியில் சிவப்பு கொடியும் கட்டப்பட்டுள்ளது. ரோபோவில் பல பைகள் மற்றும் பாட்டில்கள் வைத்திருக்கும் அளவுக்கு போதுமான இடவசதி உள்ளது. கடந்த 3 வாரங்களில் ஸ்டார்ஷிப் நிறுவனம், டெலிவரி ரோபோக்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. இந்த பகுதியில் தன்னிச்சையாக 1 லட்சம் டெலிவரியை நிறைவு செய்துள்ளது. பெரும்பாலான குடியிருப்புவாசிகள் ஆன்லைன் மூலம் தங்களது அண்டை வீட்டாருக்கும் டெலிவரி செய்ய கேட்டுகொண்டுள்ளனர். இந்த முக்கியமான நேரத்தில், நிறைய பேருக்கு ஹோம் டெலிவரி சேவையை விரிவுப்படுத்துவதற்கான அனைத்து வேலையிலும் ஈடுபட்டு வருகிறோம் எனவும் பர்லாண்ட் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment