வாட்ஸ் ஆப் வீடியோ காலில் திருமணம்: போனுக்கு தாலி கட்டிய மணமகன்

ஊரடங்கு காரணமாக, கேரளாவில் இருக்கும் மணமகனுக்கும், லக்னோவில் இருக்கும் மணமகளுக்கும், வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் திருமணம் நடந்தது. இதில் மணமகன் மொபைல் போனுக்கு தாலி கட்ட, மணமகள், தனக்கு தானே தாலி கட்டி கொண்டார். இது குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

கேரளா மாநிலம் கோட்டயம் சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித். வங்கி அதிகாரி. ஆலப்புழா பள்ளிப்பாடு பகுதியை சேர்ந்தவர் அஞ்சனா. இவர் லக்னோவில் பொறியாளராக உள்ளார். இருவருக்கும் ஏப்., 26 அன்று திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால், ஊரடங்கு காரணமாக லக்னோவில் இருந்து அஞ்சனா வர முடியவில்லை. இருப்பினும், நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் தீர்மானித்தனர். வீடியோ காலில் திருமணத்தை நடத்த இருவரும் முடிவு செய்தனர்.

இதன்படி லக்னோவில் உள்ள அஞ்சனா மணப்பெண் கோலத்திலும், கேரளாவில், ஸ்ரீஜித் மணமகன் கோலத்திலும் மொபைல் போன் முன் அமர்ந்து வாட்ஸ் ஆப் மூலம் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரீஜித் , தாலியை மொபைல் போனுக்கு கட்டினார். அஞ்சனா, தன் கையில் இருந்த தாலியை தன் கழுத்தில் கட்டி கொண்டார். அருகில் இருந்த இரு வீட்டாரும், ஆசி வழங்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக வைரலாக பரவி வருகிறது.

Related posts

Leave a Comment