பெண்களைத் திருமணம் செய்வதாகக் கூறி காதலித்து ஏமாற்றி நகைகளை மோசடி செய்து வந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் யாழ். நாவாந்துறையைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடம் இருந்து 15 பவண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் தன்னிடம் இருந்து 45 பவுண் நகைகளைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்று வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
தன்னைக் காதலிக்கிறார் என்று கூறிப் பழகிய சந்தேகநபர் திருமணம் செய்துகொள்வார் என்று உறுதியளித்திருந்தார் என்றும் முறைப்பாட்டாளரான பெண் தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்வார் என்கிற நம்பிக்கையில் அவர் கேட்டபோதெல்லாம் தனது தங்கச் சங்கிலி, மோதிரம், தோடு, அம்மாவின் தாலி என்பவற்றை தான் வழங்கினார் என்றும் அதன் பெறுமதி 45 பவுண் என்றும் முறைப்பாட்டில் அந்தப் பெண் தெரிவித்திருக்கிறார்.
நகைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்ட பின்னர் தன்னுடனான தொடர்புகளைச் சந்தேகநபர் துண்டித்துக் கொண்டார் என்றும் குறித்த பெண் தெரிவித்தார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளமை தெரியவந்தது. இந் நிலையில் கடந்த 31 ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் வைத்து சந்தேகநபரைப் பொலிஸார் கைது செய்தனர்.