ஆப்கான் வெள்ளத்தினால் 100 பேர் பலி; 500 வீடுகள் நிர்மூலம்

ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கினால் குறைந்தபட்சம் 100 பேர் உயிரிழந்துள்ளனர் என பர்வான் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,

பர்வான் (Parwan) மாகாணத்தின் தலைநகரான சரிக்கார் நகரின் பெரும்பகுதிகள் வெள்ளப்பெருக்கினால் கடுமையாக சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முற்றாக வீடுகள் சேதமடைந்துள்ள பகுதிகளில் புதையுண்டுள்ள மக்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என பர்வான் மாகாண பேச்சாளர் வாஹிதா ஷக்கார் அச்சம் வெளியிட்டார்.

இந்த சம்பவத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதும் உள்ளூர் அரசின் திறனுக்கு அப்பாற்பட்டது என்பதால் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என ஷக்கார் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் இரவு பெய்த கடும் மழையால் சரிக்கார் நகரில் ஏராளமான சிறுவர்கள் பலியாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சேதமடைந்த வீடுகளின் இடிபாடுகளுக்கு இடையில் பலர் சிக்கியிருக்கலாம் என பர்வான் மாகாணத்தின் ஷஹ்ராக் மலிமின் கிராமவாசியான அஹ்மத் ஜான் தெரிவித்தார்.

பர்வானை தாக்கிய மிக மோசமான பேரழிவுக்கு மத்தியில் பொலிஸாரும் மீட்புக் குழுக்களும் அப் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

பர்வானுக்கும் ஏனைய மாகாணங்களுக்கும் நிவாரண உதவிகளை அனுப்பிவைக்குமாறு ஆப்

கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் வெளியிட்டார்.

வெள்ளப் பெருக்கினால் ஆப்கானின் கிழக்கு மற்றும் வடக்குக்கான நெடுஞ்சாலைகள் நீரில் மூழ்கியுள்ளதாக குறிப்பிட்ட அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பேச்சாளர் அஹ்மத் தமீம் அஸ்மி, மீட்புப் பணியாளர்களைக் கொண்டு நெடுஞ்சாலைககளில் போக்குவரத்துக்களை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பர்வானில் குறைந்த பட்சம் 300 வீடுகள் அழிந்துள்ளதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய செய்கைகள் அழிந்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தரை வழியாகவும் வான் வழியாகவும் அனுப்பிவைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment