மிகப் பெரிய அருமையான என்ட்ரியுடன் மீண்டும் வருவேன் – வடிவேலு தெரிவிப்பு

பல வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமலிருந்த நடிகர் வடிவேலு, மீண்டும் மிகப் பெரிய என்ட்ரியுடன் வருவேன் எனத் தெரிவித்துள்ளார்.

தனது நகைச்சுவை நடிப்பால் உலகெங்கும் தமிழ்பேசும் மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட நடிகர் வடிவேலு 12 ஆம் திகதி சனிக்கிழமை தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அவ்வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் வடிவேலு தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவ்வீடியோவில்; அவர் ‘செப்டம்பர் 12 ஆம் திகதி என்னுடைய பிறந்தநாள். நான் தினமும் மக்களை சிரிக்க வைப்பதால் தினமும் பிறந்துக்கிட்டு தான் இருக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் நகைச்சுவை செல்வமாக நான் பிறந்து கொண்டு தான் இருக்கேன். என்னை பெற்ற அம்மாவுக்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன்.

இவ்வளவுக்கும் மக்கள் சக்தி தான் காரணம். மக்கள் சக்தி இல்லைனா இந்த வடிவேலுவே கிடையாது. என் அம்மாவுக்கு பிறகு மக்கள் தான். மக்களால் தான் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இன்னொரு கேள்வி கூட நீங்க கேட்கலாம். ஏன் இன்னும் நடிக்காம இருக்காருன்னு கேட்கலாம்.

சீக்கிரமே, மிகப்பெரிய, அருமையான எண்ட்ரியுடன் வருவேன். வாழ்க்கைனா எங்கிருந்தாலும் சைத்தான், சகுனின்னு இருக்கத் தான் செய்யும். அது எல்லோர் வாழ்க்கையிலும் உண்டு. அது என் வாழ்க்கையில் இல்லாம இருக்குமா. அங்கங்க இரண்டு இருக்கத் தான் செய்யும்’ என்றார்.

‘மிகப் பெரிய அருமையான என்ட்ரியுடன் மீண்டும் வருவேன்’ என வடிவேலு கூறியதால் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related posts

Leave a Comment