இரண்டு வருடத்தின் பின்னர் யாழ் மாநகர சபை அமர்வில் நாளை கலந்துகொள்கிறார் மணிவண்ணன்

இரண்டு வருட இடைவெளியின் பின்னர் யாழ் மாநகரசபை அமர்வில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வி.மணிவண்ணன் கலந்து கொள்ளவுள்ளார்.

மணிவண்ணனை கட்சியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் முடிவிற்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தாக்கல் செய்த மனு மீதான கட்டளையை யாழ் மாவட்ட நீதிமன்றம் இன்று வழங்கியது.

மணிவண்ணனை கட்சியிலிருந்து நீக்கும் முடிவிற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மணிவண்ணனை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதாக தெரிவத்தாட்சி அலுவலருக்கு, தமிழ் காங்கிரஸ் கடிதம் எழுதியிருந்தது. அதனடிப்படையில் அவரது உள்ளூராட்சி உறுப்புரிமை வறிதாவதாக, தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவித்திருந்தார்.

தற்போது, மணிவண்ணனை கட்சியிலிருந்து நீக்கும் முடிவை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால், தெரிவித்தாட்சி அலுவலரின் கடிதமும் வலுவற்றதாகியது.

இதேவேளை, யாழ் மாநகரசபை உறுப்புரிமையிலிருந்து மணிவண்ணனை நீக்க வேண்டுமென கடந்த வருடம், எம்.ஏ.சுமந்திரன் தரப்பின் பின்னணியில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. எம்.ஏ.சுமந்திரனே வழக்கில் ஆஜராகியிருந்தார். மணிவண்ணன் மாநகரசபை உறுப்பினராக செயற்பட இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட முரண்பாடான புதிய சூழலில், வழக்கை சுமந்திரன் தரப்பு வாபஸ்பெற்றது.

இந்த நிலையில், கட்சி உறுப்புரிமை நீக்கம், உள்ளூராட்சி உறுப்புரிமை நீக்க வழக்குகளில் மணிவண்ணனிற்கு சாதகமான நிலைமை தோன்றியதால் நாளை மாநகரசபை அமர்வில் கலந்து கொள்கிறார்.

Related posts

Leave a Comment