கொவிட் தடுப்பூசி செயற்திட்டத்தின் ஊடாக நாடு இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறதா? அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் முன்னெடுக்கப்படும் சில செயற்பாடுகள் நாடு இராணுவமயமாக்கலை நோக்கிப் பயணிக்கின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்கவின் பணிப்பின்பேரில் தொற்று நோய்த்தடுப்புப் பிரிவானது தடுப்பூசிகளை வைத்திசாலைகளுக்கு வழங்காமல் இராணுவ வைத்தியசாலைகளுக்கும் முகாம்களுக்கும் விநியோகித்துவருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

சுகாதாரத்துறையின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் அனைத்தும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, முழுமையாக இராணுவமயப்படுத்தப்படுகின்றதா? என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் முன்னெடுக்கப்படும் சில செயற்பாடுகளின் விளைவாக, நாடு இராணுவமயமாக்கலை நோக்கிப் பயணிக்கின்றதா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

குறிப்பாக தடுப்பூசி வழங்கல் செயற்திட்டம் ஸ்தம்பிதமடைந்திருந்த நிலையில், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி வழங்கல் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டு அவற்றின் ஊடாகவும் பொதுமக்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதனூடாக நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து 79 ஆயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் மேல்மாகாணத்தில் வழங்கப்பட்டிருந்தன.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த செயற்திட்டத்தை மிகவும் வினைத்திறனான வகையில் நடைமுறைப்படுத்திவந்தது.

ஆனால் தற்போது பல வைத்தியசாலைகளில் இந்தத் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டம் தடைப்பட்டிருக்கின்றது. வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை கணிசமானளவால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசிகள் இராணுவ வைத்தியசாலைகளுக்கும் இராணுவ முகாம்களுக்கும் அனுப்பப்படுவதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், சுகாதாரத்துறையின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் அனைத்தும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, முழுமையாக இராணுவமயப்படுத்தப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தடுப்பூசி வழங்கல் செயற்பாடானது தொற்றுநோய்த்தடுப்புப்பிரிவினால் உரிய விதத்தில் முன்னெடுக்கப்படாமை குறித்து நாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிவந்தோம்.

அதுமாத்திரமன்றி தடுப்பூசி வழஙகல் விவகாரத்தில் பின்பற்றப்படக்கூடிய சரியான செயற்திட்டத்தையும் நாம் முன்வைத்தோம்.

அவ்வாறிருக்கையில் தற்போது எமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்கவின் பணிப்பின்பேரில் தொற்றுநோய்த்தடுப்புப்பிரிவானது தடுப்பூசிகளை எமக்கு வழங்காமல் இராணுவ வைத்தியசாலைகளுக்கும் முகாம்களுக்கும் விநியோகித்துவருவதாக அறியமுடிகின்றது.

சுகாதாரத்துறையின் செயற்பாடுகளைப் பாதிப்படையச்செய்து, பொதுமக்களையும் அசௌகரியத்திற்குள்ளாக்கி, இந்தத் தடுப்பூசி வழங்கல் பொறிமுறையைக் குழப்புவதன் நோக்கம் என்ன?

நாடளாவிய ரீதியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கக்கூடிய இயலுமையை சுகாதாரத்துறை கொண்டிருக்கின்றது.

அவ்வாறிருக்கையில், தடுப்பூசிகளை இராணுவத்தினரிடம் வழங்குவதானது நாட்டில் எவ்வாறான ஆட்சி ஏற்படப்போகின்றது என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

Leave a Comment